|
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
நெக்கு - (வி) நெகிழ், get soaked as ground after rain
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே - ஐங் 151
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
மிதித்துவிட, சிரிக்கின்ற கண்போல் மலர்ந்த நெய்தல்
தேன் மணத்தை ஒழியாமல் பரப்பும் துறையைச் சேர்ந்தவனுக்காக
நெகிழ்ந்துபோன என் நெஞ்சத்துடன் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
மேல்
நெகிழ் - (வி) 1. நழுவு, slip off as a garment
2. இறுக்கம் தளர், loosen, unfasten
3. மெலி, grow lean, get weaken
4. சேதப்படு, (அழகு) குன்று, be impaired, wear away, wither
5. இளகு, மனமிரங்கு, melt, grow tender, to relent
1.
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
--------------- ------------------ -----------------
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே - நற் 70/1-9
சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
---------------- ----------------- ------------------
வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
அணிகலன்கள் கழன்று நழுவிப்போகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்
2.
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள - கலி 32/5
கட்டுகள் தளர்ந்து மலர்ந்த வேங்கையின் விரிந்த பூக்கள் உதிர்ந்து மணம் பரப்ப
3.
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன்கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே - அகம் 82/16-18
அரிய இருள் செறிந்த இரவில் தலையணையின்கண் சேர்ந்து,
நான் ஒருத்தி மட்டுமே இப்படி ஆகிப்போனது என்னவோ,
நீர் சொரியும் கண்களோடு மெலிந்துபோன தோளையுடையவளாக
4.
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் - அகம் 197/1,2
கரிய குவளை மலரின் அழகினை இழந்த கண்களும்
அழகு குன்றி திரைந்துபோன தலையணை போன்ற மெலிந்த தோள்களும்
5.
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் - அகம் 267/1,2
நம் நெஞ்சம் இளகத்தக்கனவற்றைக் கூறி அன்பினால் உள்ளம் கலந்து
தாம் என்றும் பிரியாமைக்குரிய சூளுறவு செய்தோராகிய நம் தலைவர்
மேல்
நெஞ்சம் - (பெ) 1. மனம், mind
2. இருதயம், heart
3. ஆகமம், Agamas
1.
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே - குறு 40/4,5
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் மனங்கள் தாமாக ஒன்றுபட்டனவே
2.
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு - கலி 103/43
எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் இருதயத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு
3
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி - பதி 21/1,2
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று,
மேல்
நெஞ்சு - (பெ) நெஞ்சம், பார்க்க - நெஞ்சம்
1. மனம், mind
2. இருதயம், நடுப்பகுதி, centre, the heart of a thing
1.
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே - குறு 49/5
நானே உன் மனத்தில் நிறைந்தவளாய் இருக்கவேண்டும்.
2.
குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் - குறு 0/3,4
குன்றின்
நடுப்பகுதி பிளக்கும்படியாக எறிந்த அழகிய சுடர்விடும் நீண்ட வேலையும்,
மேல்
நெட்டு - (பெ) நெடுமை, lenghthiness
பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவா
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே - குறு 145/3-5
நள்ளிரவில்
துயிலாமல் இருப்போரை ஏனென்று கேட்காமல்
துயிலுகின்ற கண்களையுடைய மக்களோடு, நீண்ட இரவையும் உடையது
மேல்
நெட்டுருட்டு - (பெ) நெடிய உருட்டு, தாளவகை, a kind of time-measure in music
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து
போர் ததும்பும் அரவம் போல்
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் - பரி 18/42-45
சூதில் வட்டு உருட்டுவதில் வல்லவனே! உன் மலையில், நெட்டுருட்டு என்னும்
தாளவகை மிகுந்து ஒலிக்கும் ஒலியுடன் சிறந்து,
போரில் மிகுத்து எழும் ஆரவாரம் போல
இசைக்கருவிகள் ஆரவாரிக்க, கூட்டமான மேகங்களும் அவற்றுடன் முழங்கி நின்றன;
- நெட்டுருட்டு - நெடிய உருட்டு - தாளவகை - பெ.சுப்பிரமணியன் உரை (NCBH), ச.வே.சு உரை
- நெட்டுருட்டுச் சீர் என்றது மலைப்பகுதிகளில் வருகின்ற தேர் உருள்கள் எழுப்புகின்ற ஒலியினை
- புலியூர்க்கேசிகன் உரை விளக்கம்
- நெட்டுருட்டு - long musical notes (with drums, with lutes) - Vaidehi Herbert translation
மேல்
நெடி - (பெ.அ) நெடிய என்பதன் குறுக்கம், long
நெடி இடை பின் பட கடவு-மதி என்று - அகம் 254/17
நீண்ட வழி பின்னுற செலுத்துவாய் என்று
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து - அகம் 288/9
ஆறலைப்போர் பொருந்தி நெருங்கியிருக்கும் நீண்ட பெரிய குன்றின்
மேல்
நெடிது - 1. (பெ) 1. நீண்ட நேரம், long time
2. நீண்ட காலம், long number of years
2. (வி.அ) 1. நீண்டதாக, long
2. நெடுநேரம் தாமதமாக, after a long delay
3. (வி.மு) நீளமானது, is long
1.1.
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் - சிறு 179-181
குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
(தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
1.2.
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி
வந்தேன் பெரும வாழிய நெடிது - பெரும் 460,461
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி,
வந்தேன் பெருமானே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக'
2.1
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா - நெடு 163
உரோகிணியை நினைத்தவளாய்(அவற்றைப்) பார்த்து நெடியதாக மூச்சுவிட்டு,
2.2
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே - புறம் 296/5
நீண்ட நேரம் தாழ்த்து வந்தது நெடுந்தகையாகிய இவனது தேர்
3.
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே - ஐங் 482/4
ஒருநாளேனும் இடைவழியில் தங்கினால், அது ஊழிக்கால அளவிலும் நெடியது.
மேல்
நெடிய - 1. (பெ) 1. நெடுநேரம், long time
2. நெடுந்தொலைவு, long distance
3. நெடுங்காலம், long period
4. பெரியன, big
5. நீண்டன, lenghthy
6. பெருமொழி, வீராப்பு, boasting
- 2. (பெ.அ) நீண்ட, long
- 3. (வி.உ) 1. நீண்ட தூரத்தன, are very distant
2. நீண்டு செல்வன, are very long
1.1.
நிழல் காண்-தோறும் நெடிய வைகி - நற் 9/7
நிழல் கண்ட இடமெல்லாம் நெடுநேரம் தங்கி
1.2.
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து
பெரும் கல் அதர் இடை பிரிந்த_காலை
தவ நனி நெடிய ஆயின - ஐங் 359/1-3
கிட்டுவதற்கரிய பொருள்மீது பற்றுடையவனாகி, உன்னைத் துறந்து
பெரிய பாறைகளின் வழியே செல்லும் பாதையினிடையே பிரிந்து சென்றபோது
மிக மிக நெடுந்தொலைவாக இருந்தது
1.3
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே - ஐங் 484/4
மிகவும் நீண்ட காலம் தங்கிவிட்டோம், அழகிய அணிகலன்களை அணிந்தவளை மறந்து
1.4
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து - மது 520
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து
1.5
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி - நெடு 154
சிற்சில சொற்களாலும், நீண்ட மொழிகளாலும் (ஆறுதல்)உரைகள் பலவற்றையும் திரும்பத்திரும்பக் கூறி,
1.6
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே - நற் 210/5,6
பெருமொழி பேசுவதும், விரைவாகத் தேர்களில் வலம்வருவதும்
செல்வம் இல்லை; அது முன்செய்த நல்வினைப்பயன்;
2.
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த - குறு 252/1
நீண்ட திரண்ட தோள்களில் உள்ள வளைகளை நெகிழும்படி செய்த
3.1
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது - அகம் 89/17
கொல்லையினையுடைய பெரிய காடுகளை நீண்ட தூரத்தன என்று எண்ணாது
3.2
நெடிய என்னாது சுரம் பல கடந்து - புறம் 47/2
நீண்டு செல்வன என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து
மேல்
நெடியோன் - (பெ) 1. திருமால், Lord Vishnu
2. நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் மன்னன், a Pandiya king
3. சிவபெருமான், Lord Siva
4. முருகன், Lord Muruga
5. உயர்ந்தோன், great person
6. இந்திரன், Lord Indra
1.
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் - பெரும் 402
நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தி
2
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் - மது 61
பொன்னால் செய்த மாலையை அணிந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய
வழியில் வந்தவனே
3
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக - மது 455
மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க
4.
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து - அகம் 149/16
இடையறாத விழாக்களையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே
5.
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே - புறம் 114/6
தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை.
6.
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் - புறம் 241/3
வச்சிராயுதத்தையுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலினுள்ளே
மேல்
நெடுஞ்சேரலாதன் - (பெ) ஒரு சேர மன்னன், a cEra king
கடம்பு முதல்தடிந்த கடும் சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி - பதி 20/4,5
(பகைவரின் காவல்மரமாகிய) கடம்பினை அடியோடு வெட்டி வீழ்த்தி அவரையும் வென்றழித்த மிக்க சினமும்
மெய்வன்மையுமுடைய
நெடுஞ்சேரலாதனாவான். அவன் சூடிய கண்ணி வாழ்வதாக
பதிற்றுப்பத்து என்னும் நூலுள், இரண்டாம் பத்துப் பாடல்கள் இவனைப் பற்றியன.
குமட்டூர்க் கண்ணனார் இவனைப் பாடியுள்ளார்.
இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறான்.
மேல்
நெடுந்தகை - (பெ) மேம்பாடுள்ளவன், person of great worth
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே - பதி 41/16
பழிச்சொல் அற்ற நெடுந்தகையாகிய உன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன்!
மேல்
நெடுநீர் - (பெ) நெடிய நீரையுடைய கடல், sea
கடு மா பூண்ட நெடும் தேர்
நெடுநீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே - நற் 91/12
விரைந்து செல்லும் குதிரை பூட்டிய நெடிய தேரில்
நெடிய கடல்நிலத்தலைவனாகிய நம் தலைவன் பகலில் இங்கு வருவதனை
மேல்
நெடுமாவளவன் - (பெ) ஒரு சோழ மன்னன், a chOzha king
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின் - புறம் 228/10,11
கொடிகள் மடங்கியாடும் யானையினுடைய நெடுமாவளவன்
தேவருடைய விண்ணுலகத்தை அடைந்தானாகலான்
இவன் பெயர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனை ஐயூர் முடவனார் பாடியுள்ளார்.
மேல்
நெடுமான்அஞ்சி - (பெ) ஒரு சிற்றரசன், a chieftain
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் - புறம் 206/6,7
விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய நெடுமான் அஞ்சி
தன் தரத்தை அறியாதவன்போலும், என் தரத்தையும் அறியான் போலும்
இவன் அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன் என்றும் அழைக்கப்படுகிறான்.
கொங்குநாட்டில் தருமபுரி எனப்படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தான்.
தன்னைத் தேடிவந்த புலவர் ஔவையாருக்கு உடனே பரிசில் தந்தால், அவர் உடனே
சென்றுவிடுவார் என்றெண்ணி, பரில் கொடுக்கத் தாமதித்தான். இதனைத் தவறாகப்
புரிந்துகொண்ட ஔவையார் சினந்து இவ்வாறு பாடுகிறார். பின்னர் இருவரும் நெருங்கிய
நண்பராயினர்.
மேல்
நெடுமிடல் - (பெ) ஒரு சிற்றரசன், a chieftain
நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய - பதி 32/10
தான் செய்த கொடிய போர்த்தொழில் பயன்படாது கெடவே, நெடுமிடல் அஞ்சி என்பான் இறந்தானாக
இவன் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தவன். இவனது நாடு மிக்க வளம் சிறந்ததாகும்
மேல்
நெடுமொழி - (பெ) 1. புகழ்ச்சொல், Eulogy, encomium, praise;
2. வஞ்சினம், vow
3. தன்மேம்பாட்டுரை, boast
1.
நெடுமொழி தந்தை அரும் கடி நீவி - அகம் 17/7
மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
2.
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து - பதி 44/14,15
பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி
3.
கள்ளுடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்காலை
ஏமமாக தாம் முந்துறும் - புறம் 178/8-11
கள்ளையுடைய கலத்தினராய், ஊருக்குள்ளேயிருந்து சொல்லிய
வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின்கண் மறந்த சிறிய பேராண்மையுடையவர்
போர்க்களத்தில் அஞ்சி ஓடும்போது
அவர்க்கு அரணாகத் தான் முந்திவந்து நிற்பான்
மேல்
நெடுவேள் - (பெ) 1. முருகன், Lord Muruga
2. பெரிய வேளிர்குலத்தான், magnificient king belonging to the vELir tribe
1.
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி - பெரும் 75
கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்;
2.1
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி - அகம் 61/15
முழவினை ஒத்த வலிய தோளினையுடைய பெரிய வேளாகிய ஆவி என்பானின்
2.2
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன - புறம் 338/4
புகழ்பெற்ற வேளிர் குடியிற் பிறந்த ஆதன் என்பானின் போந்தை என்னும் ஊரைப் போன்று
மேல்
நெதி - (பெ) செல்வம், wealth
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் - நற் 16/7,8
விழுமிய கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு
அந்த அளவில் ஏழு அளவு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும்
மேல்
நெய் - (பெ) 1. எண்ணெய், oil
2. வெண்ணெயை உருக்கி எடுப்பது, ghee
3. தேன், honey
1.
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் - மலை 105,106
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
எண்ணெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்
2.
ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்_பொன் கொள்ளாள் - பெரும் 162-164
இடைமகள்,
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,
நெய்யின் விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னையும் வாங்காதவளாய்,
3.
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் - மலை 525
சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,
மேல்
நெய்த்தோர் - (பெ) இரத்தம், blood
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி - பதி 30/37
இரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான பெரிய பலியானது
மேல்
நெய்தல் - (பெ) 1. பெரும்பாலும் கடற்கரைக் கழிகளில் வளரும் தாவரம், அதன் பூ,
a plant andiys flower, prodominantly found in seashore backwaters
2. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும், maritime tract
3. நெய்தல் திணைக்குரிய ஒழுக்கம், இரங்கல்
Sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract
4. சாவுப்பறை, funeral drum
5. ஒரு பேரெண், a very large number
1.
ஆம்பல், குவளை, கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை. இருப்பினும் இவை வெவ்வாறனவை என்பது இலக்கிய வழக்குகளினின்றும்
உணரப்படும்.
1.1
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் - ஐங் 2/4
இதனால், நீலம், நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.
1.2
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங் 96/2
இதனால், ஆம்பல், நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.
1.3
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி - பட் 241
இதனால், குவளை, நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.
1.4
நெய்தல் மலர் வெண்மையாகவும், கருநீலமாகவும் இருக்கும் என்பர்.
வெள்ளை நெய்தலை வெள்ளாம்பல் (White Indian waterlily Nymphaen lotus alba)என்றும்
கருநீல நெய்தலைக் கருங்குவளை (Blue nelumbo) என்றும் கூறுவர்.
இதனைக் குறிஞ்சிப்பாட்டு வெவ்வேறு அடிகளில் குறிப்பிடும்.
வாழை வள்ளி நீள் நறு நெய்தல் - குறி 79
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் - குறி 84
இவற்றில் மணிக்குலை நெய்தல் மணிநிறமான கருநீல நிறத்ததால் இது கருங்குவளையைக் குறிக்கும் என்றும்,
எனவே முன்னது வெள்ளாம்பலைக் குறிக்கும் என்றும் சொல்வர்.
1.5
நெய்தல் மலர் நிறையத் தேன் கொண்டது. நறுமணம் மிக்கது.
கள் கமழும் நறு நெய்தல் - மது 250
1.6
நெய்தல் மலரின் தண்டு நீண்டும் பருத்தும் இருக்கும்.
களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் - பெரும் 213,214
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ - நற் 96/7,8
1.7
நெய்தல் மலர் பெண்களின் கண்களுக்கு ஒப்புமையாகக் கூறப்படும்.
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் - நற் 8/8
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் - ஐங் 181/1
1.8
நெய்தல் மலரை அதன் இலைகளுடன் பறித்துத் தைத்து மகளிர் தழையணியாக அணிவர்.
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் - அகம் 70/11,12
1.9
நெய்தல் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து, ஆண்கள் தலையணியாகவும்,
பெண்கள் கூந்தலிலும் சூடிக்கொள்வர்.
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட - பொரு 218,219
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் - குறு 401/1,2
1.10
நெய்தல் மலர் விடியலில் மலரும். மாலையில் கூம்பும்
வைகறை மலரும் நெய்தல் போல - ஐங் 188/3
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக - நற் 187/1
நெய்தல் மலர்கள் கூம்பிப்போக, நிழல்கள் கிழக்குத் திசையில் நீண்டுவிழ
1.11
நெய்தல் மலர் சிறிய இலைகளை உடையது.
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று என கூறாதோளே - நற் 27/11,12
1.12
இதன் இலை யானைக் கன்றின் செவியைப்போல் இருக்கும்.
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவி
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் - நற் 47/1-6
பெரிய ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை
உடல் வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல்
நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய
இளமையான தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு, சட்டென
ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும்
1.13
இது கழிகளிலும், நெல்வயல்களிலும், கரும்புப்பாத்திகளிலும் கலித்து வளரும்,
இரும் கழி நெய்தல் போல - குறு 336/5
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் - நற் 190/5
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் - பதி 13/3
2.
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி - சிறு 151
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்
3.
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு - மது 325
நெய்தல் ஒழுக்கம் அமைந்த வளம் பலவும் நெருங்கப்பட்டு
4.
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப - புறம் 194/1,2
ஒரு வீட்டில் சாவினை அறிவிக்கும் பறை ஒலிக்க, ஒரு வீட்டில்
திருமணத்திற்குக் கொட்டப்படும் மிகக் குளிர்ந்த முழவின் ஓசை மிக ஒலிக்க
5.
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை - பரி 2/13-15
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்
மேல்
நெய்ம்மிதி - (பெ) நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு,
Food for elephants and horses, rolled into balls after mixing it with ghee
and trampling it with foot;
1.
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ - புறம் 44/1,2
கரிய பெண்யானையின் கூட்டத்தோடு, பெரிய கயத்தின்கண் படியாதனவாய்
நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாமல்
2.
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்
தண் நடை மன்னர் தாருடை புரவி - புறம் 299/4,5
நெய் பெய்து மிதித்து அமைத்த உணவை உண்ட ஒழுங்குறக் கத்திரிக்கப்பட்ட பிடரியினையுடைய
மருத நிலத்து ஊர்களையுடைய பெருவேந்தரின் தார் அணிந்த குதிரைகள்
மேல்
நெய்யாட்டு - (பெ) திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு, Oil-bath taken on festive occasions;
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட
குரை இலை போகிய விரவு மணல் பந்தர்
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த - நற் 40/1-9
நீண்ட நாவினைக்கொண்ட ஒள்ளிய மணி, காவலுள்ள மனையில் ஒலிக்க,
ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,
பெரும்பாணர்கள் காவலிருக்க, ஒரு பக்கத்தில்
திருந்திய இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க,
நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்
ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,
மேல்
நெரி - (வி) 1. நொறுங்கு, நசுங்கு, be crushed, broken, smashed; to crack;
2. கைவிரலை சுடக்கு, creak, as the fingers
3. நெருக்கமாக இரு, be crowded
4. நெருங்கு, approach
5. நசுக்கு, squeeze, crush
6. வளை, arch, curve, bend;
1.
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை - குறு 208/2
சண்டையிடும் ஆண்யானைகள் மிதித்து நொறுங்கிப்போன அடிமரத்தையுடைய வேங்கைமரம்
2.
வெதிர்படு வெண்ணெல் வெவ்வறை தாஅய
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் - அகம் 267/11,12
மூங்கிலில் விளைந்த வெள்ளிய நெற்கள் வெப்பம் மிக்க பாறையில் உதிர்ந்து பரந்து
நகத்தை நெரிப்பது போன்ற ஓசையுடன் பொங்கிப் பொரிந்திடும்
3.
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் - பரி 14/13
நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் நெருக்கமான அரும்புகளையுடைய காந்தளின்
4.
எரி பூ பழனம் நெரித்து - புறம் 249/3
எரிபோலும் நிறத்தவாகிய பூவையுடைய பொய்கைகளை நெருங்கி
5.
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து - பரி 11/130,131
குளிர்ந்த தும்பிக்கூட்டங்களைப் பாருங்கள்! தான் விரும்பி மொய்த்த பூவினை நசுக்கியவளை
போர்முனையிடத்தில் பொருந்திய சினத்தைக் கொண்ட நெஞ்சினையுடையதாய் முதலில் தாக்கி
6.
நீரின் வந்த நிமிர் பரி புரவியும்
காலின் வந்த கரும் கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குட மலை பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரி பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி - பட் 185-192
கடலில் (மரக்கலங்களில்)வந்த நிமிர்ந்த நடையினையுடைய குதிரைகளும்,
(நிலத்தில்)வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகளும்,
இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்,
பொதிகை மலையில் பிறந்த சந்தனமும், அகிலும்,
தென்திசைக் கடலில் (பிறந்த)முத்தும், கீழ்த்திசைக் கடலில் (பிறந்த)பவளமும்,
கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)வளையும்படி திரண்டு
மேல்
நெரிதரு(தல்) - (வி) 1. நொறுக்கு, உடை, break to pieces
2. செறிவாக இரு, be dense and crowded
3. நெருங்கிவா, approach closely
1.
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று - அகம் 137/7
வரும் நீர் உடைத்திடும் கரைந்து மெலிந்த கரையினையுடைய பெரிய ஆறாகிய காவிரியின்
2.
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு - அகம் 236/5
இடைநிலத்தில் செறிந்துள்ள நீண்ட கதிரினையுடைய பல நெற்கட்டுகளை
3.
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் - குறி 131-133
மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
இமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே நெருங்கிவருகையினால்,
அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட
மேல்
நெருஞ்சி - (பெ) ஒரு முள்செடி, Cow's thorn, a small prostrate herb, Tribulus terrestris;
1. இது வறண்ட நிலத்தில் நெருக்கமாய் வளரும், மிகச் சிறிய இலைகளைக் கொண்டது.
இதன் பூ காண்பதற்கு இனிமையானது. மிகச் சிறியது.
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு - குறு 202/2,3
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி - பட் 256
2.
இது முட்களையுடையதாதலால், பார்ப்பவர் பிடுங்கி எறிவர். எனவே இது பாழடைந்த இடங்களில்
படர்ந்து வளரும்.
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி - பதி 26/10
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ - புறம் 155/4
மேல்
நெருநல் - (பெ) நேற்று, yesterday
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் - நற் 184/3
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
மேல்
நெருநை - (பெ) நேற்று, yesterday
நின் வெம் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே- ஐங் 71/2,3
உனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று
மகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில்
மேல்
நெல்மா - (பெ) தவிடு, bran
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை - பெரும் 343,344
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
மேல்
நெல்லி - (பெ) ஒரு மரம், அதன் காய், Emblic myrobalan, phyllanthusemblica;
1.
இதன் இலை மிகச் சிறியதாக இருக்கும்.
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய் - அகம் 291/16
2.
இதன் காய்கள் இலேசான புளிப்புச் சுவை உள்ளவை.
நெல்லி அம் புளி மாந்தி அயலது - குறு 201/4
3.
இதன் காயைத் தின்ற பின் நீர் குடித்தால் சுவையாக இருக்கும் என்பர்.
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி - அகம் 54/15,16
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
4
சிறுவர்கள் விளையாடும் பளிங்கு உருண்டைகள் போல் இதன் காய்கள் இருக்கும்.
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி - அகம் 5/9
5.
இந்த நெல்லிக்காய்களை வைத்து சிறுவர் உருட்டி விளையாடுவர்.
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - நற் 3/4
6.
இந்த நெல்லி சடைசடையாகக் காய்க்கும்.
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி - அகம் 399/14
7.
புறாக்கள் இதன் காய்களைக் கொத்தித் தின்னும்.
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி - அகம் 315/10,11
8.
இதன் காய்கள் மேற்புறத்தில் புள்ளிகள் இன்றி வழுவழுப்பாகவும் பச்சையாகவும் இருக்கும்.
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் - அகம் 363/6
மேல்
நெற்றம் - (பெ) நெற்று, A dried, mature seed or nut
கொடிறு போல் காய வால் இணர் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் - நற் 107/4-6
பற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை மரத்தின்,
வீசுகின்ற காற்று தூக்கி அசைத்ததால் இலையெல்லாம் உதிர்ந்துபோன நெற்றுக்கள்
பாறையிலிருந்து வீழ்கின்ற அருவியைப் போல ஒல்லென்று ஒலிக்கும்
மேல்
நெற்று - (பெ) முதிர்ந்து, காய்ந்த காய், A dried, mature seed or nut,
வாகை, உழிஞ்சில், கொன்றை ஆகியவற்றின் காய்கள் காய்ந்து வற்றலாகி நெற்றுகள் ஆகும்.
வாகை வெண் நெற்று ஒலிக்கும் - குறு 7/5
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் - குறு 39/2
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று - அகம் 115/11
மேல்
நெறி -1. (வி) 1. சுருண்டிரு, அலையலையாகு, be curly, wavy as one's hair
2. பூவின் புறவிதழை ஒடி, strip a flower of its calyx;
3. செறிந்திரு, செறித்துவை, be dense, pack closely
- 2. (பெ) 1. வளைவு, சுருள், curl
2. பாதை, way, path, road
3. கோட்பாடு, ஒழுக்கநியதி, principle, code of conduct
4. வழிமுறை, means, method
5. நல்லொழுக்கம், path of virtue, righteousness
1.1
அறல் என நெறிந்த கூந்தல் - அகம் 213/23
கருமணல் போல் நெளிநெளியாக வளைந்த கூந்தலையும்
வயங்கு ஒளி
நிழல்_பால் அறலின் நெறித்த கூந்தல் - அகம் 265/7,8
விளங்கும் ஒளி வாய்ந்த
நிழற்கண்ணுள்ள அறல் போல நெளிந்த கூந்தலினையும்
1.2
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் - கலி 143/31,32
நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல்
எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன்
1.3
விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன - அகம் 131/1,2
வானளாவ உயர்ந்த கரிய அடியினையுடைய இகணை மரத்தின்
பசிய நிறமுடைய மெல்லிய இலைகளை நெருங்கச் செறித்து வைத்தாற்போன்ற
2.1
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் - பெரும் 162
குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்
2.2
வரை சேர் சிறு நெறி வாராதீமே - நற் 336/11
மலையை அடுத்த சிறிய வழியில் வராமலிருப்பீராக!
2.3
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி - மது 500
அறக்கோட்பாடுகளினின்றும் தவறாது, நல்வழியே நடந்து
2.4
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் - புறம் 184/5,6
அறிவுடைய அரசன் இறைகொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ளின்
கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்து அவன் நாடு மிகவும் தழைக்கும்
2.5
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து - புறம் 224/4
அறத்தைத் தெளிய உணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அவைக்களத்தின்கண்
மேல்
நெறிசெய் - (வி) ஒழுங்குபடுத்து, put in order
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து - கலி 131/7,8
அறைகின்ற சுறாமீனின் வெண்மையான கொம்புகளை இருப்பிடமாகக் கோத்து, ஒழுங்குபடுத்திய
நெய்தல் மலர்களை நீண்ட நாரால் கட்டிச் சேர்த்து,
மேல்
நென்னல் - (பெ) நேற்று, yesterday
அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டு என மொழிய - ஐங் 113/1-3
கேட்பாயாக, தோழியே! நேற்று,
உயர்ந்தெழும் கடலலைகள் வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இந்த ஊரார் நான் காதலி என்று கூற
மேல்
|
|
|